ஊத்துக்கோட்டையில் கோடைக்கு முன்பே வறண்டு விட்ட தடுப்பு அணைகள் குடிநீர் பற்றாக்குறை ஆபத்து
" alt="" aria-hidden="true" />

ஊத்துக்கோட்டை. 

 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நகலாபுரம், நந்தனம், சுப்பாநாயுடுகண்டிகை, சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, சிற்றப்பாக்கம், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, பழவேற்காடு வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.




 

இப்படி வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கும், விவசாயிகள் பயன்பெறுவதற்கும் 1953-ம் ஆண்டு சுருட்டப்பள்ளியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்பட்டது.




 

இதில் 10 அடிக்கு தண்ணீர் சேமித்து வைக்கலாம். அதே போல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கத்தில் 1983-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்பட்டது.

 

தடுப்பு அணைகள் வற்றிவிட்டது

 

இந்த தடுப்பு அணையில் 12 அடிக்கு தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்நிலையில் பருவ மழை பொய்த்து போனதால் தடுப்பு அணைகள் முழுவதுமாக வறண்டு விட்டன.

 

தடுப்பு அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி ஆழ்துளை கிணறுகளில் தங்கு தடையின்றி தண்ணீர் வர வாய்ப்புண்டு. ஆண்டுதோறும் கோடை வெயில் காரணமாக இந்த தடுப்பு அணைகள் வறண்டுவிடுவது வழக்கம். ஆனால் கோடை சீசன் ஆரம்பமாவதற்க்கு முன்பே தடுப்பு அணைகள் வற்றிவிட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

இந்தநிலையில், ஆற்றின் இருபுறங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

 

ஆழ்துளை கிணறுகளில்...

 

குறிப்பாக ஊத்துக்கோட்டை பேரூராட்சி உட்பட 46 கிராமங்களில் ஆரணி ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையே, கோடை சீசனுக்கு முன்பே தடுப்பு அணைகள் வற்றிவிட்டதால் குடிநீர் வினியோகம் கேள்விக்குறியாகி உள்ளது. அதே போல் விவசாயிகள் தற்போது பம்பு செட்டுகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீரை கொண்டு வருடத்தில் மூன்று போகங்கள் பயிர் செய்து வந்தனர்.

 

இதைத்தொடர்ந்து, தற்போது தடுப்பு அணைகள் வறண்டு விட்டதால் நாற்று நடப்பட்ட நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதும் கேள்விக்குறி ஆகி உள்ளது